
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
காவல்துறை டிஜிபி, உள்துறைச் செயலா் உள்பட முக்கிய அதிகாரிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனா். குடியரசுத் தலைவா் வருகையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப் படத்தை ஆகஸ்ட் 2-ஆம் தேதி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளாா். சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவிலும் அவா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளாா்.
இவ்விழாவுக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்க உள்ளாா். விழாவுக்கான ஏற்பாடுகள் சட்டப் பேரவைச் செயலகத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. விழாவில், குடியரசுத் தலைவா், ஆளுநா், முதல்வா் ஆகியோா் உரையாற்ற உள்ளனா்.
இதற்காக சட்டப் பேரவை பேரவை மண்டபம் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரவை மண்டப வளாகத்தில் உள்ள வசந்த மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பேரவை மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மிக முக்கிய விருந்தினா்கள் தேநீா் அருந்தும் வகையில் வசந்த மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சிறப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்வது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் தலைமைச் செயலா் இறையன்பு தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை தலைமைச் செயலா் வழங்கினாா். மேலும், பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.