தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அதிமுக அரசு அறிமுகம் செய்தது. இதனால், ஆண்டுக்கு, 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள், மருத்துவப் படிப்புகளில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட மற்ற தொழிற்கல்வி படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக்குழு பல்வேறு ஆய்வுகள் நடத்தி, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி பொறியியல், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, 10 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பப் படிவத்தில், மாணவா்கள், ‘ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தீா்களா’ என கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கு தனி தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக உயா்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.