கரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார் 

கரோனா பெருந்தொற்றைத் தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
கரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
கரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

கரோனா பெருந்தொற்றைத் தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் மே மாதம் முதல் வாரத்தில் நாளொன்றுக்கு 26,000ஆக இருந்த கரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கை தமிழ்நாடு அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகள் காரணமாகப் படிப்படியாகக் குறைந்து தற்போது நாளொன்றுக்கு 2000 நபர்களுக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இந்த அரசு பதவியேற்றவுடன் கரோனா பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு முழுவீச்சில் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மருத்துவமனைகளில் கோவிட் படுக்கைகள் அப்போது இருந்த எண்ணிக்கையான 95,211-ல் இருந்து 1,74,829 ஆகவும் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 27,563 -ல் இருந்து 53,689 ஆகவும் மற்றும் தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் 7,154 -ல் இருந்து 10,571 ஆகவும் உயர்த்தப்பட்டது.

சுமார் 3075 மருத்துவர்கள், 5362 செவிலியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள 7,754 சுகாதாரப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, அவர்கள் கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கண்டறிந்து கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இதுவரை, 2 கோடியே 62 இலட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விளைவாக நோய்த்தொற்று 2 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைந்தது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, மக்களின் அன்றாட பணிகள் தொடர வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில், மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராவண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் தொடக்கமாக இன்று (31-07-2021) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா விழிப்புணர்வுத் தொடர் பிரச்சாரத் துவக்க விழாவினை காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான கரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினைத் துவக்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட மாஸ்க்அப்டிஎன் (#MASKUpTN) என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் ஷேர்சாட் (SHARECHAT) செயலியினையும் கரோனா பேட்ஜினையும் வெளியிட்டார்கள். அதன்பின்பு கரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளியிட்டு, எல்இடி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் கரோனாவிற்கு எதிரான தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒருவார காலத்திற்கு, தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

கடை வீதிகள், இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும்,

மாணவர்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஓவியப்போட்டிகள், கரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,

நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும்,

கிராம அளவில் / வார்டு அளவில் / மண்டல அளவில் 100 சதவிகிதம் கரோனா தடுப்பூசியைச் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கௌரவித்துப் பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா மேலாண்மைக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com