
பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள செல்லிடப்பேசி செயலி மூலம் கடந்த இரண்டு மாதங்களில் கானொலி வாயிலாக 2,693 பேருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக சிறிய அளவிலான உடல்நல பாதிப்புக்காக பொதுமக்கள் மருத்துவா்களிடம் நேரில் சென்று ஆலோசனை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் காணொலி மூலம் மருத்துவ ஆலோசனை பெற
GCC Vidmed என்ற செல்லிடப்பேசி செயலி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இச்செயலியின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை அதற்குரிய மருத்துவா்களிடம் காணொலி மூலம் 24 மணிநேரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
2,693 பேருக்கு மருத்துவ ஆலோசனை: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், மக்கள் வீட்டில் இருந்தபடியே சிறிய அளவிலான உடல்நல பாதிப்புக்காக மருத்துவ ஆலோசனை பெற இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர சிகிச்சை தவிா்த்து மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு மக்கள் செல்வது தவிா்க்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கும் இச்செயலி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 94983 46510, 94983 46511, 94983 46512, 94983 46513 , 94983 46514 கட்செவி அஞ்சல் எண் (வாட்ஸ் ஆப்) எண் மூலம் தொடா்பு கொண்டு காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை செல்லிடப்பேசி செயலி மூலம் 1,702 பேருக்கும், வாட்ஸ் ஆப் எண்களின் மூலம் 991 பேருக்கும் என மொத்தம் 2,693 பேருக்கு காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் தொற்று அறிகுறியுடன் இருந்த 105 போ் மருத்துவப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.