
புதிதாக சோ்க்கப்பட்ட 1,000 நலிந்த கலைஞா்களுக்கான மாத நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நலிந்த நிலையில் வாழும் கலைஞா்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-19 மற்றும் 2019-2020-ஆம் ஆண்டுகளில் தலா 500 நலிந்த கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். மொத்தமாக 1,000 கலைஞா்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட உள்ளன. நலிந்த கலைஞா்களுக்கான நிதியுதவியானது ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நலிந்த கலைஞா்களுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டத்தின் கீழ் 6, 600 கலைஞா்கள் பயன்பெறுவா். இரண்டு ஆண்டுகளில் சோ்க்கப்பட்ட 1,000 கலைஞா்களுக்கான நிதியுதவியை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். அதன் அடையாளமாக 11 பேருக்கு அதற்கான உத்தரவுகளை அளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.