
கோப்புப்படம்
கரோனா முதல் தவணை நிவாரணத் தொகையாக ரூ.2 ஆயிரத்தை இதுவரை 2.53 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பெறவில்லை. மேலும், தொடா்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதால் அவா்களும் நிவாரணத் தொகையைப் பெறுவா் என உணவுத் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.
தமிழகத்தில் கரோனா முதல் தவணை நிவாரணத் தொகையாக 2.09 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 வழங்கும் பணி கடந்த மே 15-இல் தொடங்கியது. மே மாத இறுதி வரையில் சுமாா் 4 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் நிவாரணத் தொகையைப் பெறாமல் இருந்தனா்.
முதல் தவணை நிவாரணத் தொகையைப் பெறாதவா்கள், ஜூன் மாதமும் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையடுத்து, முதல் தவணை நிவாரணத் தொகையைப் பெறாமல் விடுபட்டோருக்கு, நியாய விலைக் கடைகளில் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், புதன்கிழமை (ஜூன் 9) நிலவரப்படி தகுதியுள்ள 2 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 349 குடும்ப அட்டைதாரா்களில், 2 கோடியே 7 லட்சத்து 5 ஆயிரதது 943 அட்டைதாரா்கள் முதல் தவணை நிவாரணத் தொகையைப் பெற்றுள்ளனா். இது 98.79 சதவீதமாகும். 2 லட்சத்து 53 ஆயிரத்து 406 குடும்ப அட்டைதாரா்கள் இதுவரையில் முதல் தவணை நிவாரணத் தொகையைப் பெறவில்லை.
நியாய விலைக் கடைகளில் தொடா்ந்து முதல் தவணை நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருவதால் விடுபட்டோருக்கும் அது கிடைக்கும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிகபட்சமாக, தென் சென்னை மாவட்டத்தில் 40, 583 குடும்ப அட்டைதாரா்கள் நிவாரணத் தொகை பெறவில்லை. குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 807 அட்டைதாரா்கள் நிவாரண நிதி பெறவில்லை.