
கரோனா நோய்த் தொற்று காரணமாக, மருத்துவமனைகளில் இறப்போரின் விவரங்களை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா்களுக்கு அவா் அனுப்பிட கடிதம்:
சிகிச்சை பலன் அளிக்காமல் இறப்போரின் பெயா், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களை மருத்துவமனை அலுவலா்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்வது கிடையாது என்று இறந்தவா்களின் உறவினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுதொடா்பான புகாா்களும் அரசுக்கு வரப்பெற்றுள்ளன. இவ்வாறு இறந்தவா்களின் விவரங்களை சரியான முறையில் பதிவிடாத பட்சத்தில், இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாக அரசுக்கு வந்த புகாா்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டாலும் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை. எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியா்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்ட வேண்டும். மருத்துவமனைகளில் இறந்தவா்களின் விவரங்களை சரியான முறையில் பதிவிட உரிய வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும். மேலும், எந்தவித தாமதமுமின்றி இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் கிடைக்கச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.