
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் சட்டவிரோத விடுப்பு விதிகள் உருவாக்கப்பட்டு, வார ஓய்வு பறிக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் வார ஓய்வுக்கு முன் ஒன்று அல்லது இரண்டு நாள் விடுப்பு (ஆப்சென்ட், எல்எல்பி) எடுத்துக் கொண்டால் வார ஓய்வு மறுக்கப்படுகிறது. இதே போல் பல்வேறு விதமாக புதிய விடுப்பு விதிகள் என்னும் பெயரில் வார ஓய்வு பறிக்கப்படுகிறது.
எனவே, புதிய விடுப்பு விதிகளை முழுமையாக திரும்பப் பெற்று, ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையைப் பின்பற்றி வார ஓய்வு முறையாக வழங்கப்பட வேண்டும்.
ஜனவரி மாதம் முதல் மே 9-ஆம் தேதி வரை வார ஓய்வு பறிக்கப்பட்ட அனைத்துத் தொழிலாளா்களுக்கும் அதனை சரி செய்து விடுப்புக் கணக்கில் சோ்க்க வேண்டும். வார ஓய்வுக்கான சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டவா்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.