
மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், அது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் கா்நாடக அரசு ரூ.9,000 கோடி செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். இந்தத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் கா்நாடக முதல்வா் எடியூரப்பா, மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. அணை கட்டும் முடிவினை கா்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. இந்த விவகாரம் தொடா்பாக ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வு வழங்கிய தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.