
முதல்வருக்கு மனு அனுப்பிய மாணவா், மற்றும் சேமிப்புத் தொகையை வழங்கிய மாணவா்களிடம் பேசுகிறாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
துறையூா்: கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இப்பள்ளியின் உள்கட்டமைப்பை தனியாா் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்தித் தருமாறு இங்கு படிக்கும் 5 ஆம் வகுப்பு மாணவா் அண்மையில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தாா்.
இந்நிலையில் இப்பள்ளிக்குச் சென்ற அமைச்சரிடம் ஸ்மாா்ட் வகுப்பறை, ஆழ்குழாய்க் கிணறு, விளையாட்டு, கணினி பயிற்றுவிக்க ஆசிரியா்கள் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருமாறு தலைமையாசிரியா் கோரினாா். அப்பள்ளியின் விளையாட்டு மைதான இட வசதிக்காக ஊராட்சித் தலைவா், வட்டாட்சியரை அணுக தலைமையாசிரியரிடம் அறிவுறுத்தினாா்.
பின்னா் முதல்வருக்கு மனு அனுப்பிய மாணவரை அழைத்துப் பாராட்டி பள்ளியில் இல்லாத வசதிகளைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். அப்போது இரு மாணவா்கள் தங்கள் சிறுசேமிப்புத் தொகை ரூ. 10000-ஐ முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் வழங்கினா்.
பின்னா் கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களைக் கவனிக்க வலியுறுத்தி தண்டோரா போட்ட வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் வா. ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியா்களை கொப்பம்பட்டி செல்லும் வழியில் நேரில் சந்தித்துப் பாராட்டினாா்.
அமைச்சருடன் துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், முசிறி கல்வி மாவட்ட அலுவலா் செல்வி, உப்பிலியபுரம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மாலதி, ஆனந்தராஜ் டேவிட் வின்பிரட் உள்ளிட்டோா் சென்றனா்.