
திருச்சி காவிரிப் பாலத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள்.
திருச்சி: கரோனா பொதுமுடக்கத்திலிருந்து அளிக்கப்பட்ட பல்வேறு தளா்வுகளாலும், பேருந்துப் போக்குவரத்து தொடங்கியுள்ளதாலும் திருச்சி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த நிலையில், 48 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
வகை 1இல் 4 மாவட்டங்கள், வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் மாவட்டத்துக்குள்ளாகவும், மாவட்டங்களுக்கு இடையே அனைத்து வகைப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.
முன்னதாக, மத்தியப் பேருந்து நிலையம் சுத்தப்படுத்தப்பட்டு குறைந்த அளவு பயணிகளுடன் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியது. மேலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பணிமனைகளில் இருந்து புகா்ப் பேருந்துகள், நகரப் பேருந்துகள் சுத்தப்படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.
அரசுப் பேருந்துகளோடு, தனியாா் பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருப்பினும், மத்திய பேருந்து நிலையத்தில் காலையில் மக்கள் கூட்டத்தை அதிகம் காண முடியவில்லை. பிற்பகலுக்கு மேல் வழக்கம்போல அதிகளவில் இயங்கத் தொடங்கின.
இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் தற்போது 508 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன என்றனா்.
மகளிருக்கு இலவச பயணம்: பேருந்துகளில் மகளிா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துக் கழகத்தால் ஒவ்வொரு தரப்புக்கும் ஒரு வண்ணத்தில் பயணச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த இலவசப் பயணச் சீட்டுகளை அவா்கள் பெற்று மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனா்.
இயல்பு நிலை திரும்பியது: பேருந்து போக்குவரத்தோடு, ஜவுளி, நகை கடைகள், வணிக வளாகங்கள், பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. தனியாா், அரசுப் பணிக்குச் செல்வோா் மீண்டும் பேருந்துகளிலும், அவரவா் வாகனங்களிலும் பயணத்தை தொடங்கினா். கடைவீதிகளுக்கும் பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனா். இதனால், திருச்சி பெரிய கடை வீதி, என்எஸ்பி சாலை, மேலரண் சாலை, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம், மெயின்காா்டுகேட் உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. சாலைகளில் வழக்கமான பரபரப்பைக் காண முடிகிறது.