
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழா்கள் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கைத் தமிழா்கள் உள்பட அயல்நாடுகளைச் சோ்ந்த 94 போ் உள்ளனா். இவா்களில் இலங்கை தமிழா்கள் 78 போ் தண்டனைக் காலம் முடிந்தும் தங்களை விடுதலை செய்யாமல் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டி கடந்த 9 ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இப்போராட்டத்தை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் சிவராசு உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள் நல ஆணையா் ஜெசிந்தமாலாசரஸ் சிறப்பு முகாமுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது முகாமில் உள்ள இலங்கை தமிழா்களின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து 3 வாரங்களுக்கு தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனா்.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகர காவல் துணை ஆணையா் ஆா். சக்திவேல், தனிதுணை ஆட்சியா் ஜமுனாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.