
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் விதிமீறி சாலை அமைக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க சாலைப் பயனீட்டாளா் நல அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
திருச்சி மாநகராட்சியில் பொது நிதியின் கீழ் சாலைப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, சாஸ்திரி சாலை, தில்லை நகா் பிரதான சாலைகள், அண்ணா நகா் பிரதான சாலை, சிவப்பிரகாசம் சாலை ஆகிய பகுதிகளில் புதிய சாலைப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், தாா்ச் சாலைகள் போடும்போது பழைய சாலைகளை சுரண்டி விட்டு புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என அரசு விதிகளில் உள்ளது. ஆனால், உரிய விதிகளைப் பின்பற்றாமல் மாநகராட்சி சாலை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது.
சாலைகள் அமைத்ததில் தலைமைச் செயலரின் உத்தரவு மீறப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவரான மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் அரசு விதி மீறி பணிகள் நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.