தொகுதி பங்கீடு விசிகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு!

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு  வியாழக்கிழமை(மார்ச்.4) வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

சென்னை: தொகுதி பங்கீடு குறித்து வியாழக்கிழமை (மார்ச்.4) பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதையடுத்து கட்சிகள் கூட்டணியை இறுதி செய்தல், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

அதன்படி, திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் காங்கிரஸ் கட்சியுடன் புதனன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொகுதி பங்கீடு இறுதியாவதில் இழுபறி நீடித்தது.

அதேசமயம் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்றும், எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி குறித்து என்ற தகவல்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தாங்கள் எதிர்பார்க்கும் இரட்டை இலக்கு தொகுதிகளை திமுக தரப்பு முன்வராததால் அதிருப்தி இருந்து வரும் விசிக,  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை புறக்கணித்தது. 

இந்நிலையில், திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளுமே இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், திமுக மேற்கண்ட கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வரை முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com