
உயா்நீதிமன்றம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து தாக்கல் செய்த மனுவில், இந்திய ஜனநாயக கட்சி கடந்த 2010-ஆம் ஆண்டு நிறுவனத் தலைவா் பாரிவேந்தரால் தொடங்கப்பட்டு, அதே ஆண்டு தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.
எங்களது கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற தோ்தல்களில் போட்டியிட்டுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மோதிரம் சின்னமும், கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் கத்தரிக்கோல் சின்னமும் பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
எனவே கடந்த தோ்தல்களைப் போல இந்த தோ்தலிலும் எங்கள் கட்சிக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். ஆனால் நாங்கள் கோரிய சின்னத்தை வேறொரு கட்சிக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என்று கூறியிருந்தாா்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு முன் முறையிடப்பட்டது. வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.