
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், மோடி அரசாங்கம் இந்த ஆண்டு சமர்ப்பித்த பட்ஜெட்டில் ஐடிபிஐ வங்கி மற்றும் 2 அரசுக்கு சொந்தமான வங்கிகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2020 நவம்பர் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வங்கிகளைத் துவங்க அனுமதித்து ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவில் கூட கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்தியாவில், பொதுத்துறை அரசு வங்கிகள்தான் ஏழை எளிய மக்களுக்கு விவசாய கடன், கல்விக் கடன், சிறுகுறு தொழில் கடன், பெண்களுக்கான சுயஉதவி குழுக் கடன் ஆகியவற்றை வழங்குகின்றன. இவைகள் முறையாக திரும்பிச் செலுத்தப்படுகின்றன.
இன்று அரசு வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மோசமான கடன் வசூல் கொள்கையால் கடந்த 33 மாதங்களில் 585473 கோடி ரூபாய் பொதுப் பணத்தை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இன்று அதே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இன்றைக்கு அரசு வங்கிகளை கையகப்படுத்த முன்னணியில் நிற்கின்றன. பொதுத்துறை வங்கிகள்தான் மக்களின் சேமிப்பிற்கு முழு பாதுகாப்பளிக்கும். அரசு வங்கிகளில் தான் வெளிப்படைத் தன்மையுடன் இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணிக்கு ஊழியர்கள் நியமிக்கப் படுகின்றனர்.
வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் சேமிப்புகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மேலும் இடஒதுக்கீடு கோட்பாடு செயலிழந்து விடும். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டுமானத்துறைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் திரட்டுகின்றன. இவை தனியார் மயமாக்கப்பட்டால் இந்த மூலதன குவியல் அனைத்தும் தனியார் கையாடுவதற்கும், அவர்களுடைய லாப வேட்டையை உயர்த்துவதற்குமே அது பயன்படும்.
மத்திய அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் கொள்கை மக்கள் விரோதமானது, தொழிலாளர் விரோதமானது. எனவே மத்திய அரசாங்கம் இத்தகைய கொள்கைகளை கைவிட்டு “பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும். அரசு வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது. பிற்போக்குத்தனமான வங்கி சீர்திருத்தக் கொள்கைகளை கைவிட வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு 2021 மார்ச் 15, 16 ஆகிய இரு தினங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத்துள்ளன.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்து பொதுமக்களும் பேராதரவு அளித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.