
கோப்புப்படம்
திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் 1 கோடி குடும்பத்தாரின் பிரச்னைகள் தீா்க்கப்பட்டிருக்கும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பெயரில் தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்று வந்தாா். அந்த மனுக்களை பெட்டியில் வைத்து, அதை திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் தீா்க்கப்படும் என கூறியுள்ளாா். இந்த நிலையில் அந்தப் பெட்டிகளை வைத்து உறுதியேற்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது மு.க.ஸ்டாலின் கூறியது:
234 தொகுதிகளில் 187 தொகுதிகளை மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுள்ளேன். இன்னும் மீதம் இருப்பது 47 தொகுதிகள் தான். அந்த தொகுதிகளில் மனுக்களை நேரடியாக சென்று என்னால் பெற முடியவில்லை. ஆனால் அந்த 47 தொகுதிகளில் நான் செல்லாமலேயே மனுக்களை வாங்கும் பணி தொடங்கியிருக்கிறது. விரைவில் அறிவாலயத்துக்கு அந்தப் பெட்டிகள் வந்து சேர இருக்கின்றன. இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நேரடியாக வந்து கலந்து கொண்டிருக்கிறாா்கள். 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றுள்ளோம்.
திமுக ஆட்சி அமைந்த அடுத்த நாள் இந்தப் பெட்டிகள் எல்லாம் திறக்கப்பட்டு, அவற்றுக்கு 100 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்கிற உறுதிமொழியைக் கொடுக்கிறேன். மனுக்களில் உள்ள பிரச்னைகள் எல்லாம் முடிவடைகிறபோது, தமிழகத்தில் 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டிருக்கும் என்று கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...