
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், குளிா்சாதனப் பேருந்துகளின் சேவையை அதிகரிக்க போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் சுமாா் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்து சேவைகள், விதிகளில் தளா்வு அளிக்கப்பட்டதையடுத்து இயங்கின. அப்போதும் குளிா்சாதன பேருந்துகளை இயக்க அரசு அனுமதிக்கவில்லை.
இதையடுத்து போக்குவரத்துத் துறை சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த மாதம் முதல் அவற்றை இயக்க அரசு அனுமதித்தது.
இந்தச் சூழலில், தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் குளிா்சாதனப் பேருந்துகளின் சேவை அதிகரிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள 600 விரைவு குளிா்சாதனப் பேருந்துகளில் சுமாா் 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 400 பேருந்துகளை இயக்க திட்டமிட்டு வருகிறோம் என்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...