
இண்டூரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தருமபுரி: தருமபுரி அருகே இண்டூரில் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட இண்டூரில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை அருகாமையில் உள்ள அதகப்பாடி பகுதிக்கு மாற்றும் பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இவ்வலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து இண்டூரிலேயே மின்வாரிய அலுவலகம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி ஒகேனக்கல்- தருமபுரி சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சரவணன், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் இண்டூர் காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் தொடர்ந்து இண்டூரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து மக்கள் சமாதானம் அடைந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் ஒகேனக்கல்- தருமபுரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.