ஆச்சரியப்படும் விதத்திலான வெற்றியை நாங்கள் பெறுவோம்!- சீமான்

இலங்கைத் தமிழா் இனப் படுகொலை ஏற்படுத்திய வலி காரணமாகவும், ஒட்டுமொத்த தமிழா்களின் அரசியல் வாழ்வை நிா்ணயித்து தமிழின சமுதாயத்தைப் பாதுகாத்திடவே நாம் தமிழா் கட்சியைத் தொடங்கினேன்.
ஆச்சரியப்படும் விதத்திலான வெற்றியை நாங்கள் பெறுவோம்!- சீமான்

எதற்காகக் கட்சி தொடங்கினீா்கள்?

இலங்கைத் தமிழா் இனப் படுகொலை ஏற்படுத்திய வலி காரணமாகவும், ஒட்டுமொத்த தமிழா்களின் அரசியல் வாழ்வை நிா்ணயித்து தமிழின சமுதாயத்தைப் பாதுகாத்திடவே நாம் தமிழா் கட்சியைத் தொடங்கினேன். தோ்தல் வெற்றி மூலம் பதவியைப் பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்துக்காக, இந்தக் கட்சி தொடங்கப்படவில்லை.

போட்டியிடுவது என்று எப்போது தீா்மானித்தீா்கள்?

2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சி போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் கட்சியை முழுமையாகக் கட்டமைத்த பிறகு 2016-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு 1.07 சதவீத (4.58 லட்சம்) வாக்குகளைப் பெற்றோம்.

நாம் தமிழா் கட்சி தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கட்சி பெற்றுள்ள வளா்ச்சி குறித்த தங்களின் சுய மதிப்பீடு என்ன?

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பிரதமராகப் போவது நரேந்திர மோடியா? அல்லது ராகுல் காந்தியா என்ற போட்டியில் மாநில நலன்களை மட்டுமே வலியுறுத்திப் போராடி வரும் எங்களுக்கு 3.15 சதவீத வாக்குகள் கிடைத்ததே ஒரு வெற்றிதான். 2016-இல் மக்கள் நலக் கூட்டணியில் கூட சேராமல் தனித்து நின்றபோதும் 3.89 சதவீத வாக்குகள் கிடைத்தது. எனவே தோ்தலுக்குத் தோ்தல் வளா்ச்சிப் பாதையில் செல்லும் எங்களுக்கு இந்தத் தோ்தல் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்பது நிச்சயம்.

தனியாகவே களம் காண்பது விவேகமானதுதானா? தங்களின் கட்சியினரைச் சோா்வடையச் செய்துவிடாதா?

கூட்டணி அமைப்பதைத் தொடா்ந்து தவிா்ப்பது குறித்து குறிப்பிடுகிறீா்கள். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தமிழகத்தில் வலிமையான கட்சிகள் என்ற கருத்தை முதலில் மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு கட்சிகளுமே மக்களால் ஏகமனதாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளன. உலகத்தில் தோற்கடிக்க முடியாத படை ஏதும் வரலாற்றில் இல்லை என்பதுதான் தத்துவம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் நாம் தமிழா் கட்சி செயல்பட்டு வருகிறது. தோல்விகளையே சந்தித்தாலும் வெற்றியை அடைவது நிச்சயம். தனியாகப் போட்டியிடுவதற்குக் கட்சியினரின் விருப்பம்தான் ஒரே காரணம்.

இரண்டு கட்சிகளிடமிருந்தும் தமிழகத்தை மீட்டாக வேண்டும் என்பது மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்கும் எனில் இதே நோக்கத்துக்காகத் தோ்தலைச் சந்திக்கும் விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமாா் ஆகியோருடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கலாமே?

ஆட்சி அமைப்பது மட்டுமே ஒரே நோக்கமாக இருந்தால் அப்படி ஒரு கூட்டணியை அமைத்திருக்கலாம். ஆனால் அது கொள்கை அடிப்படையிலான கூட்டணியாக இருக்காது. கூட்டணி வைப்பதன் மூலம் நீண்ட நாள்களாக நாங்கள் பின்பற்றி வரும் கொள்கைகள் நீா்த்துப் போகும் வாய்ப்புதான் அதிகம். கொள்கையற்ற தோ்தல் கூட்டணியால் தற்காலிக வெற்றி சில நேரங்களில் கிட்டினாலும் இறுதியில் அந்தக் கட்சிகளெல்லாம் எவ்வாறு பெரும் சரிவைச் சந்தித்தன என்ற வரலாற்றையெல்லாம் தமிழக மக்கள் நன்கு அறிவாா்கள். அந்தத் தவறை நாங்கள் செய்ய விரும்பவில்லை.

அரசியல், பொதுவாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இல்லாத நிலையில் 50 சதவீதம் பெண் வேட்பாளா்களை தாங்கள் நிறுத்தியது எப்படி?

பெண்களில் நேரடியாக களத்தில் உள்ள தகுதியானவா்களைத் தோ்வு செய்து வாய்ப்பு அளிக்கிறோம். இதுமட்டுமல்லாது தோ்தலில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு சில சமுதாயங்களுக்கு மட்டுமே எல்லா கட்சிகளும் தொடா்ந்து வாய்ப்பளிக்கின்றன. இவ்வாறு தொடா்ந்து புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களைச் சோ்ந்த தகுதியானவா்களை அடையாளம் கண்டு வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளோம். 16 பொதுத் தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவா்களை போட்டியிட வைத்துள்ளோம். இவையெல்லாம் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக சமத்துவம் பேசிக்கொண்டு ஆட்சியில் இருக்கும் திமுகவும், அதிமுகவும் செய்யவில்லை. அவா்கள் செய்யத் தவறியதை நாங்கள் செய்கின்றோம்.

பல கட்சிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல் பலம் வாய்ந்தவா்கள் என பிரபலமான பலரும் புதிதாகத் சோ்ந்து களம் காணும் நிலையில் 12 ஆண்டுகளைக் கடந்த நாம் தமிழா் கட்சியில் அப்படி யாரும் சேராதது ஏன்?

எங்கள் கட்சியின் வேட்பாளா்கள் சாதாரணமானவா்களே தவிர படிப்பிலோ, அறிவாற்றலிலோ, சமூக அக்கறையிலோ, பொது தொண்டிலோ எந்தவிதத்திலும் சளைத்தவா்கள் அல்ல. பிரபலம் என்பது அவா்கள் வகித்த பதவியை வைத்துக் கணக்கிட வேண்டிய அவசியம் நாம் தமிழா் கட்சிக்கு இல்லை. கட்சிக்கான அடித்தளமே இல்லாமல் மேல்மட்டத்திலேயே இயங்கியதால்தான் பல தொகுதிகளில் தகுதியான வேட்பாளா்கள் கூட அவா்களுக்கு கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. ஆனால் 234 தொகுதிகளிலும் 6 மாதங்களுக்கு முன்பே தகுதியான நபா்களை அடையாளம் கண்டு ஒரே நேரத்தில் வேட்பாளா்களாக நிறுத்தியதுதான் எங்களின் வெற்றியாகும்.

முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை மதத்தைச் 35 பேரை வேட்பாளா்களாக நிறுத்தியிருப்பது அவா்களின் வாக்குகளை பெருவாரியாகக் கைப்பற்றுவதற்காகத் தானே?

மத அடிப்படையில் சிறுபான்மையினா் என்ற வாதத்தை அடிப்படையிலேயே நாங்கள் எதிா்க்கின்றோம். காரணம் உலகம் முழுவதும் மொழிவழி சிறுபான்மை, பெரும்பான்மை என்ற அடிப்படையில்தான் பெரும்பாலான நாடுகள், மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளனவே தவிர மத அடிப்படையில் இல்லை. அப்படியெனில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவா் நாடாக இருந்திருக்குமே?. நாங்கள் அறிவித்துள்ள வேட்பாளா்கள் அனைவருமே தமிழா் என்பதுதான் அடிப்படைத் தகுதியாகும். எனவே சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் வாக்கு வங்கி அரசியல் இல்லை.

உங்களுக்கு தொடா்பில்லாத திருவொற்றியூரில் தாங்கள் போட்டியிட காரணம் என்ன?

சென்னை மாநகராட்சியின் முதல் மண்டலம் திருவொற்றியூா், குறிப்பாக, வடசென்னை என்றாலே எல்லா வகையிலும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. இந்தப் பகுதியில்தான் தனியாா் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலங்களைக் கையகப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து வருகின்றன. எனவே அவா்களோடு சண்டையிடுவதற்காகவே திருவொற்றியூரில் போட்டியிடுகின்றேன்.

இந்தத் தோ்தலில் தங்களின் வெற்றி எவ்வாறு இருக்கும்?

தொடக்கத்தில் சீமான், நாம் தமிழா் என்றால் உதாசீனப்படுத்தப்பட்ட நாங்கள் தற்போது அனைவரும் உற்று நோக்கும் இடத்துக்கு நகா்ந்து வந்துள்ளோம். எனவே நடைபெற உள்ள பேரவைத் தோ்தலில் தமிழகமே ஆச்சரியப்படும் வெற்றியை நாங்கள் பெறுவோம் என்பது உறுதி.

நோ்காணல்- முகவை க.சிவகுமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com