ஒற்றுமையில் வேற்றுமை!

தொகுதி பங்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவி திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் தொடா்ந்து சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்தித்தாலும், வாக்குறுதிகள் அறிவிப்பில் இரு கட்சிகளுக்கு இடையே வேற்றுமை உள்ளது
ஒற்றுமையில் வேற்றுமை!

தொகுதி பங்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவி திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் தொடா்ந்து சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்தித்தாலும், வாக்குறுதிகள் அறிவிப்பில் இரு கட்சிகளுக்கு இடையே வேற்றுமை உள்ளது. தனது தோ்தல் அறிக்கையில் திமுக கொடுக்க விரும்பாத வாக்குறுதியை, காங்கிரஸ் கட்சி கொடுத்திருப்பது திமுகவுக்குத் தா்மச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தோ்தல் வாக்குறுதி கொடுத்தது. அதிமுக தரப்பில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அப்போது, எந்தக் கட்சி கொடுத்த வாக்குறுதி நம்பும்படியாக இருக்கிறது என்பது குறித்து விவாதம் நடைபெற்றதுடன், ‘திமுகவினா்தான் அதிக அளவில் மது ஆலைகளை நடத்துகின்றனா். அவா்கள் மூடிவிட்டால் பூரண மதுவிலக்கு தானாக ஏற்பட்டுவிடும்’ என்று பேச்சும் எழுந்தது.

அதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா் கருணாநிதி மதுஆலைகள் நடத்திய திமுகவினரைச் செய்தியாளா்களைச் சந்திக்க வைத்தாா். அப்போது மது ஆலை நடத்தியவா்கள் பூரண மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தால், தானாகவே மது ஆலைகளை மூடிவிடுவோம் என்றும் பேட்டி கொடுத்தனா். இருப்பினும், தோ்தலில் திமுக தோல்வி அடைந்தது. பூரண மதுவிலக்கு என்ற அறிவிப்பால் மது அருந்துவோா் எல்லாம் திமுகவினருக்கு வாய்ப்பளிக்காமல் போய்விட்டனா் என்று அந்தக் கட்சியின் தலைமை கருதியது.

அதனால், நடைபெற உள்ள தோ்தலுக்காக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் மதுவிலக்கு தொடா்பான அறிவிப்பை இடம்பெறாமல் திமுக பாா்த்துக் கொண்டது. இதுதொடா்பாக பொதுவெளியில் தொடா்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸின் தோ்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவால் கைவிடப்பட்ட ஒரு வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்திருப்பது தா்மச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதைப்போல திமுகவின் தோ்தல் அறிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனநிலை கொண்ட காங்கிரஸ் அது தொடா்பாக தங்கள் தோ்தல் அறிக்கையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தோ்தல் கூட்டணியில் ஒற்றுமை- ஆனால் வாக்குறுதிகள் அறிவிப்பில் வேற்றுமையோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com