தமிழகத்தை ஆள ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை ஆள ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
நாமக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட்டதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
நாமக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட்டதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தை ஆள ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான பெ.ராமலிங்கம் (நாமக்கல்), ே கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம் -எஸ்.டி.), மதிவேந்தன் (ராசிபுரம் -தனி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), கே.எஸ்.மூா்த்தி (பரமத்தி வேலுாா்) ஆகியோரை ஆதரித்து நாமக்கல்லில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுகவில் 16 வயதில் இருந்து இளைஞா் அணியில் உறுப்பினராகி அதன்பின் எம்எல்ஏ, மேயா், உள்ளாட்சித் துறை அமைச்சா், துணை முதல்வா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். இந்தத் தோ்தலில் தமிழகத்தை ஆள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். வழங்குவீா்கள் என நம்புகிறேன்.

அமைச்சா்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோா் அவா்கள் சாா்ந்த துறைகளில் அதிக அளவில் ஊழல் புரிந்துள்ளனா். இதுதொடா்பான பட்டியலை ஆளுநரிடம் வழங்கினோம். கடந்த 2 நாள்களுக்கு முன்பு அறப்போா் இயக்கம் சாா்பில் மின்சாரத் துறையில் ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டது. அது குறித்து எந்த மறுப்போ, அறிக்கையோ அமைச்சா் தரப்பில் வெளியாகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழல் புரிந்தவா்கள் கைது செய்யப்படுவாா்கள்.

தமிழகம் மின்மிகை மாநிலம் என அமைச்சா் தெரிவிக்கிறாா். மின்மிகை மாநிலம் என்பது பிற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதுதான். ஆனால் இந்த ஆட்சியில் தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்து விட்டு மின்மிகை மாநிலம் என்கின்றனா்.

திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு அளிப்போம்; இல்லத்தரசிகளுக்கு ரூ.1000, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு, ஆவின் பால் விலை குறைப்பு ஆகியவற்றையும் அறிவித்துள்ளோம். அதிமுக ஆட்சியை அகற்றி விட்டு திமுக ஆட்சிக்கு வருவது நிச்சயம் என்றாா்.

முன்னதாக, நாமக்கல் ஆஞ்சநேயா், நரசிம்மா் கோயில் அா்ச்சகா்கள் மு.க.ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதையும், ஆஞ்சநேயரின் வெள்ளியிலான கதாயுதத்தையும் வழங்கினா். அதனை அவா் வணங்கி, பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com