வாரிசு அரசியலை ஒழிக்கும் தேர்தல் இது! முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வாரிசு அரசியலை ஒழிப்பதற்கான தேர்தல் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
வாரிசு அரசியலை ஒழிக்கும் தேர்தல் இது! முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வாரிசு அரசியலை ஒழிப்பதற்கான தேர்தல் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
 விராலிமலையில் அமைச்சரும், வேட்பாளருமான சி. விஜயபாஸ்கர், திருமயத்தில் பி.கே. வைரமுத்து, ஆலங்குடியில் தர்ம. தங்கவேல், அறந்தாங்கியில் மு.ராஜநாயகம், புதுக்கோட்டையில் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், கந்தர்வகோட்டையில் உ.ஜெயபாரதி உதயகுமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை பேசியது: தமிழகத்தை சாதாரணக் குடிமகனுக்கும் ஆளும் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிக்கும் கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வாரிசு அரசியலை ஒழிப்பதற்கான தேர்தல். விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்துத் திட்டத்தைச் செயல்படுத்தி, நீரை சேமித்து முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. கல்லணைக் கால்வாய் புனரமைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் தண்ணீர் வருமா, வராதா என்ற அச்சம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே இருந்து வந்தது. காவிரி பிரச்னையில் 50 ஆண்டு காலப் போராட்டத்தை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி நமக்கு உரிமையைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் காவிரியில் நமக்கான பங்கு தண்ணீர் கிடைப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 ஆனால் திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது காவிரி பிரச்னையை பொருள்படுத்தவில்லை. நாட்டு மக்களையும், விவசாயிகளையும் பற்றிக் கவலைப்படவில்லை.
 அதிமுக அரசு என்ன செய்தது என தொடர்ந்து ஸ்டாலின் கேட்டுக் கொண்டே இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 உண்மையான இயக்கம் அதிமுக: கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீதுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. புதுகையில் துணை நகரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒன்றுமே நடக்கவில்லை என ஸ்டாலின் கூறிக் கொண்டே வருகிறார். உண்மை பேசும் இயக்கம் அதிமுக.
 புனிதமான சட்டப்பேரவையில் திமுகவினர் செய்த அராஜகம், அட்டகாசத்தை எல்லோரும் அறிவீர்கள். பேரவைத் தலைவர் தனபாலை அவரது இருக்கையில் இருந்து இறக்கிவிட்டு அதிலே உட்கார்ந்தார்கள். அதன்பிறகு சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார் ஸ்டாலின். இவர்கள்தான் நாட்டை ஆள ஆசைப்படுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு வளம்பெறுமா? அராஜக கட்சி திமுக.
 ஊர் ஊராகப் போய் மக்களிடம் மனு வாங்குவதாக நாடகமாடுகிறார்கள். எங்கள் அமைச்சர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 5.25 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
 பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள், நிதி உதவி அளித்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் புதுகை மக்களின் நூற்றாண்டுக் கனவுத் திட்டமான
 ரூ. 14,400 கோடி மதிப்பிலான காவிரி - குண்டாறு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக தொடக்க உள்ளோம். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. விராலிமலையில் அரசு கலைக் கல்லூரி மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். திருமயம் கோட்டை சுற்றுலா மையமாக அறிவிக்கப்படும்.
 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக: நெடுவாசல் பகுதியில் பொதுமக்கள் பெரும் போராட்டத்துக்குப் பிறகு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அதிமுக அரசு தடை செய்தது. அத் திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசு, அதனை தடை செய்தது அதிமுக அரசு. அதேபோல் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக.
 நடப்பாண்டில் 435 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்: மருத்துவக் கல்வியில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினோம். இதன்மூலம் நடப்பாண்டில் 435 மாணவர்கள் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர் என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com