மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம் அதிமுக: திருத்துறைப்பூண்டியில் முதல்வர் பேச்சு

திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு காரணமாக பல்வேறு இழப்புகளை சந்தித்த தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியது ஜெயலலிதாதான் என்றார் முதல்வர். 
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாருக்கு வாக்கு சேகரிக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாருக்கு வாக்கு சேகரிக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி

திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு காரணமாக பல்வேறு இழப்புகளை சந்தித்த தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியது தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என்று குறிப்பிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக முதல்வர் வியாழக் கிழமை காலை 10 மணி அளவில் திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்குரைஞர் சுரேஷ்குமாருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்தவர்கள் திமுகவினர் தானென்றும் காவிரி டெல்டா பாலைவனமாகும் வருவதை தடுக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்தது அதிமுக என்றும் குறிப்பிட்டார்.

இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது. பொதுவுடைமை இயக்கத்தினர் வேலைவாய்ப்பைப் பற்றி பேசுவார்கள் என்பதால் இதனை குறிப்பிடுகிறேன். மின்தடை இல்லாமல் பார்த்துக் கொண்டால்தான் தொழில் நடத்த முடியும். வேளாண் துறையிலும் பாதிக்கப்பட்டுவிடும் எனவே சரியான முறையில் நிர்வகிக்க காரணம் தமிழகம் சரியான திசையில் வெற்றி நடைபோடுகிறது.

மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைகிறது.

அதிமுக நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின்  சொல்லி வருகிறார். 

நான் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகள் இரண்டு மாதமாக இதில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன்.

அதிமுக ஆட்சியை கலைத்து கட்சியை உடைக்க பல்வேறு சூழ்ச்சிகளையும் நெருக்கடிகளையும் ஸ்டாலின் செய்தபோதும் அதனை தொண்டர்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கி கடந்த நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம். ஆட்சியையும் கவிழ்க்க முடியவில்லை காட்சியையும் குறைக்க முடியவில்லை.

அதிமுக நாட்டு மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார். திமுக வீட்டு மக்களுக்காக உழைக்கின்ற கட்சி.

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் தெய்வமாக இருந்து எங்களை வழி நடத்துகின்றார்கள்.

ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முன்வர வேண்டும். ஆட்சியை கவிழ்க்கவும் கட்சியை உடைக்க முயற்சி செய்வது தரமற்ற செயல்.

அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்துத் திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரினோம். அதில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம். அதன்மூலம் கடைக்கோடியில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட காலத்தில் நடவு செய்யும் அளவிற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஆண்டுதோறும் 27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கனவாக விளங்கிய மருத்துவக் கல்வியை 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு மூலமாக 435 ஏழை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி நனவாகியுள்ளது. இதற்கான கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற ஆண்டில் தொடங்கப்பட உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் 1,650 கூடுதல் இடங்களில் மேலும் உள் ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் பயன் பெற வழிவகை ஏற்படும்.

பொதுவுடமை இயக்கத்தை சேர்ந்த மணலி கந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும். திருத்துறைப்பூண்டி வட்டத்தை இரண்டாகப் பிரித்து முத்துப்பேட்டை தனி வட்டமாக அறிவிக்கப்படும்.

இப்படிச் செய்தால் இந்த தொகுதியில் அனைத்து நலத்திட்டங்களும் செய்து முடிக்கப்படும். எனவே, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் சுரேஷ்குமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com