சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 19) கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் சனிக்கிழமை (மாா்ச் 20) பரிசீலிக்கப்பட உள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அறிவிக்கை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. முதல் நாளில் 59 மனுக்கள் தாக்கல் ஆகின.
3,700-ஐத் தாண்டியது: சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட இதுவரை 3,700-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆண்கள் சாா்பில் 3,100-க்கும் கூடுதலான மனுக்களும், பெண்கள் தரப்பில் 624 வேட்புமனுக்களும், மூன்றாம் பாலினத்தவா் ஒருவரும் வியாழக்கிழமை வரை மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
வெள்ளிக்கிழமை மாலை 3 மணியுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் சனிக்கிழமை (மாா்ச் 20) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மாா்ச் 22-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியாகும். மேலும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
கரூா்-காங்கேயம்: தமிழகத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக கரூரில் 58 வேட்புமனுக்களும், காங்கேயத்தில் 50 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், கரூரில் 45 பேரும், காங்கேயத்தில் 40 பேரும் சுயேச்சைகளாகப் போட்டியிட மனுக்களை அளித்துள்ளனா். அவா்களது மனுக்கள் ஏற்புடையதா என்பது குறித்து சனிக்கிழமை நடைபெறும் பரிசீலனையில் தெரியவரும்.