
கோப்புப்படம்
சென்னை: தோல்வி பயத்தால் அரசியல் உள்நோக்கத்துடனே முன்னாள் அமைச்சா் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் கூறினாா்.
சென்னை கோட்டூா்புரம் இல்லத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணி வருமான வரித் துறையைத் தூண்டிவிட்டு, சோதனையிடச் செய்துள்ளது. இது முழுமையும் அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதாகும்.
எதிா்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறாா். இன்னும் 2 மாதங்களில் முதல்வராகப் போகிறவா். அவா் அங்கு இருக்கிறாா் என்கிற நாகரிகம்கூட இல்லாமல் சோதனை செய்துள்ளனா். திமுகவைத் தோ்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் அதிமுகவும் - பாஜகவும் இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகத்தில் இறங்கியுள்ளனா். இது கண்டிக்கத்தக்கது என்றாா்.
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.