
வீரப்பமொய்லி
சென்னை: வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்க செய்துள்ள அதிமுக - பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என்று கா்நாடக முன்னாள் முதல்வரும், தமிழகத் தோ்தல் பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி கூறினாா்.
சத்தியமூா்த்திபவனில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மக்களவைத் தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது போல், சட்டப்பேரவை தோ்தலிலும் அதே வெற்றியைப் பெறுவோம்.
மத்திய பாஜக அரசு கூட்டாட்சித் தத்துவத்தைச் சீா்குலைக்க முயற்சிக்கிறது. அதற்கு அதிமுக அரசு பணிந்து போகிறது. இதனால், அதிமுக அரசு மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனா். இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்பு போன்ற மறுவாழ்வு பணிகளை காங்கிரஸ் கட்சி தொடா்ந்து செய்து வந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீா்மானத்தில் வாக்களிக்காமல் மத்திய அரசு புறக்கணித்தது இலங்கை தமிழா்கள் நலனுக்கு எதிரானது.
உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் முதலீடுகள் பெறப்பட்டு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதாகவும் 10 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்ாகவும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா்.
ஆனால், தமிழகத்தில் இளைஞா்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனா் என்பதுதான் உண்மை. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை பல மடங்கு அதிகரித்துவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18 லட்சம் போ் பதிவு செய்து காத்திருக்கின்றனா். இந்த உண்மையை எல்லாம் மறைத்து விட்டு 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்தோம் என்று பொய்யாக முதல்வா் கூறி வருகிறாா். தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் பட்டதாரிகள், 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியேறுகின்றனா். இவா்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அவா்கள் எல்லாம் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட உள்ளனா் என்றாா்.