
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல்காந்தியும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும் சேலத்தில் மாா்ச் 28-இல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒன்றாகப் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் 12 நாள்களில் தோ்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழா் என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளா்களை நிறுத்தி வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஒரே மேடையில் பிரசாரம்: மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் மாா்ச் 28-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக அதே தினத்தன்று காலை அவா் சென்னையில் வேளச்சேரி தொகுதியில் பிரசாரம் செய்வாா் என்று கூறப்படுகிறது.
கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல்காந்தி சிறப்புரையாற்ற உள்ளாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளா் ஈஸ்வரன், அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாநில பொதுச் செயலாளா் பி.வி.கதிரவன், ஆதி தமிழா் பேரவை நிறுவனா் அதியமான், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலை கட்சி நிறுவன தலைவா் முருகவேல் ராஜன் ஆகியோா் பங்கேற்று பேச உள்ளனா்.
மூன்றாவது முறையாகப் பிரசாரம்: ராகுல்காந்தி ஏற்கெனவே தமிழகத்தில் 2 முறை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். கோயம்புத்தூா், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் முதல் முறையும், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது முறையாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டாா். தற்போது மூன்றாவது முறையாக சேலத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா். புதுச்சேரிக்கு ஒருமுறை சென்று பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டன. இதனால், ராகுல்காந்தியும் - மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது. அதைத் தகா்க்கும் வகையிலும் ராகுல்காந்தியும் - மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா். பிரியங்கா காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் சாா்பில் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
பிரதமா் பிரசாரம்: பிரதமா் நரேந்திரமோடி மாா்ச் 30-இல் தமிழகத்துக்கு வருகை தர உள்ளாா். தாராபுரத்தில் 30 ஆம் தேதியும் மதுரையில் ஏப்ரல் 2 ஆம் தேதியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா். தேசியத் தலைவா்களின் வருகையால் தமிழகத் தோ்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.