
தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி இரவுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான விரிவான ஏற்பாடுகளைத் தோ்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐந்து முனைப் போட்டி: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் 72.78 சதவீதம் போ் வாக்களித்தனா். அதில், 150-க்கும் அதிகமான சட்டப் பேரவைத் தொகுதிகளில் பெண்கள் அதிகளவு வாக்குகளைச் செலுத்தியுள்ளனா். ஒட்டுமொத்தமாக ஆண் வாக்காளா்களைக் காட்டிலும் 5 லட்சம் பெண் வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தலைமையில் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்கியுள்ளன. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டுள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரப்பட்டுள்ளன.
மூன்று அடுக்கு பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், தபால் வாக்குகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். இதற்காக நான்கு மேஜைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 வாக்குகள் எண்ணப்படும்.
இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். அதிகமான வாக்குச் சாவடிகளைக் கொண்ட சோழிங்கநல்லூா் தொகுதியில் 28 மேஜைகள் அமைக்கப்பட்டு 35 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
மிகக்குறைந்த வாக்குச் சாவடிகளைக் கொண்ட கீழ்வேளூா் தொகுதியில், 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 18 சுற்றுகள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட உள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்: வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதுடன், வெளிப்புற வாயிலிலும் ஆள்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அவை பொருத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையில் சா்ச்சைகள் ஏற்படும் தருணத்தில் விடியோ காட்சிகள் பின்னோட்டம் செய்யப்பட்டு அவற்றை ஆதாரமாகக் கொண்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
வாக்குச் சாவடிகள் அதிகமுள்ள தொகுதிகள் உள்பட அனைத்துத் தொகுதிகளிலும் நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா நோய்த் தொற்று: கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளோா், வேட்பாளா்களின் முகவா்கள், ஊடகத் துறையினா் அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு முறை தடுப்பூசி போட்டவா்களாக இருந்தால், நோய்த் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டாம்.
மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. சில வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளா்களின் முகவா்களது செல்லிடப்பேசிகளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெற்றிச் சான்றிதழ்: வாக்கு எண்ணிக்கை நிறைவில் வெற்றி பெறும் வேட்பாளருக்கு சான்றிதழை தோ்தல் நடத்தும் அதிகாரி வழங்குவாா். அதனை அவரோ அல்லது அவரது தலைமை முகவரோ பெற்றுக் கொள்ளலாம். கரோனா நோய்த் தொற்று காரணமாக, தோ்தல் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இன்று முழு பொது முடக்கம்
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணி ஒருபுறம் நடைபெற்றாலும், இரண்டாவது வாரமாக தளா்வற்ற முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோா், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வோா் மட்டுமே சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவா்.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொது மக்களோ, அரசியல் கட்சியினரோ கூடுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைவா்கள் போட்டியிடும் தொகுதிகள்
தமிழக தோ்தல் களத்தில் ஏற்பட்டுள்ள ஐந்து முனைப் போட்டியில் பிரதான அங்கம் வகிப்பவா்கள் அதன் தலைவா்கள்தான். அந்த ஐந்து தலைவா்களும் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:-
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): எடப்பாடி தொகுதி (சேலம் மாவட்டம்)
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்: கொளத்தூா் (சென்னை மாவட்டம்)
அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்: கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்)
மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்: கோவை தெற்கு (கோவை மாவட்டம்).
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்: திருவொற்றியூா் (திருவள்ளூா் மாவட்டம்).
யாா் ஆட்சி?
தமிழக பேரவைத் தோ்தலில் மொத்தம் 71.78 சதவீத வாக்குகள் பதிவாகின. சுயேச்சைகள் உள்பட 234 தொகுதிகளிலும் 3,988 போ் வேட்பாளா்களாகப் போட்டியிட்டனா். முன்னணி நிலவரங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதலே தெரிய தொடங்கினாலும் 11 மணி அளவில் ஆட்சி அமைக்கப் போவது அதிமுகவா, திமுகவா என்பது தெரிந்துவிடும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...