விளாத்திகுளத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தது திமுக

விளாத்திகுளம் தொகுதியில் 9 முறை வென்ற அதிமுகவை வீழ்த்தி 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றியை பெற்று வரலாறு படைத்துள்ளது.
விளாத்திகுளம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீ.வி. மார்க்கண்டேயனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல்காசிம்.
விளாத்திகுளம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீ.வி. மார்க்கண்டேயனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல்காசிம்.

 விளாத்திகுளம்: சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் 9 முறை வென்ற அதிமுகவை வீழ்த்தி 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றியை பெற்று வரலாறு படைத்துள்ளது.

திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் 90348 வாக்குகள் பெற்று வெற்றியை நிலைநாட்டினார். விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன், திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் க.சீனிச்செல்வி,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சே. வில்சன், புதிய தமிழகம் வேட்பாளர் சி. முத்துக்குமார், நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் கருப்பசாமி, பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் காந்தி மள்ளர், தென் இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மாணிக்கராஜா, சுயேச்சை வேட்பாளர்களாக ஆறுமுக பெருமாள், ஆறுமுகம், செல்லத்துரை, முருகானந்தம், ராஜாமணி என மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். இதில் அதிமுக திமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவியது. கடந்த 1977 முதல் 2016 வரை நடைபெற்ற மொத்தம் 11 தேர்தல்களில் 1977, 1980, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய 8 தேர்தல்களில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2019-இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும் சவால்களை எல்லாம் முறியடித்து 9-வது முறையாகவும் விளாத்திகுளத்தில் அதிமுக வெற்றியை தக்க வைத்தது.

தற்போது நடைபெற்று முடிந்த 2021 பொதுத்தேர்தலில் 9 முறை வென்ற அதிமுகவை வீழ்த்தி விளாத்திகுளத்தில் திமுக தனது வெற்றியை நிரூபணம் செய்துள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு பின்னால் ஏறத்தாழ 25 ஆண்டுகளை கடந்து திமுக மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளது அரசியல் களத்தில் திமுகவின் வெற்றி கணக்கு வரிசையில் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
  
விளாத்திகுளம் தொகுதியில் ஆண்கள் 1,05,903 பெண்கள் 1,10,544 இதர 5 வாக்குகள் என மொத்த வாக்குகள் 2,16,452 ஆகும்.
தேர்தலில் ஆண்கள் 79,954 பெண்கள் 85,728 இதர 3 வாக்குகள் என மொத்தம் 1,65,685 வாக்குகள் (76.55 சதவீதம்) பதிவாகியிருந்தன.
மொத்தம் 23 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருந்து கடைசி சுற்று வரை முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் 90,348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  

அவர் தனக்கு அடுத்தப்படியாக வந்த அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 38,549 வாக்குகள் கூடுதலாக பெற்று தொகுதியை கைப்பற்றியது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.  விளாத்திகுளம் சட்டமன்ற பேரவை தொகுதியிலிருந்து சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை ஜீ.வி. மார்க்கண்டேயனிடம், விளாத்திகுளம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல்காசிம்  வழங்கினார். அப்போது உடன்  ஆகியோர் உடனிருந்தனர். கால் நூற்றாண்டுகள் கடந்து விளாத்திகுளம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியினரை பெரும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

விளாத்திகுளம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன்:  90,348
அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன்: 51,799
அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் க.சீனிச்செல்வி: 6,657
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி: 11,828
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சே. வில்சன்: 1,520
புதிய தமிழகம் வேட்பாளர் சி. முத்துக்குமார்: 1,055
நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் கருப்பசாமி: 613
பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் காந்தி மள்ளர்: 121
தென் இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி வேட்பாளர் மாரிமுத்து: 404
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மாணிக்கராஜா: 487

சுயேச்சை வேட்பாளர்கள்:
ஆறுமுக பெருமாள்: 268
ஆறுமுகம்: 272
செல்லத்துரை: 312
முருகானந்தம்: 348
ராஜாமணி : 101
நோட்டா: 1,036


திமுக வெற்றியும்... ஜீ.வி.மார்க்கண்டேயனும்:

வழக்குரைஞரான ஜீ.வி. மார்க்கண்டேயன் 2011-2016 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் விளாத்திகுளம் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் அதற்கு முன்பு 10 ஆண்டுகள் புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராகவும் இருந்துள்ளார். அதிமுகவின் தலைமை கழக பேச்சாளர், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.

ஜெயலலிதா அம்மையார் மறைவுக்கு பிறகு அதிமுகவுக்குள் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள், உட்கட்சி பூசல்கள், நெருக்கடிகள் காரணமாக அமைதியாக ஒதுங்கி இருந்தார். 2019இல் விளாத்திகுளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும், மார்க்கண்டேயனுக்கும் ஏற்பட்ட அரசியல் யுத்தத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஜீ.வி. மார்க்கண்டேயன் சுயேச்சையாக போட்டியிட்டு 27 ஆயிரத்து 456 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். 

அதன் பின் 2020 அக்டோபர் மாதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் கட்சியில் இணைந்து தனது தீவிர அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கி களப்பணிகள் ஆற்றி வந்தார். 5 மாத காலத்தில் விளாத்திகுளம் தொகுதியில் 30 ஆயிரம் பேரை திமுகவில் உறுப்பினராக இணைத்தார். இதனால் கடந்த 5 மாதங்களாக விளாத்திகுளம் தொகுதி அரசியல் களம் சூடுபிடித்து பரபரப்புடன் காணப்பட்டது.

அதனை தொடர்ந்து 2021 பொதுத்தேர்தலில் திமுக வேட்பாளராக விளாத்திகுளத்தில் மார்க்கண்டேயன் களம் இறக்கப்பட்டார். இதனால்  விளாத்திளம் தொகுதியில் அதிமுக திமுக இடையே மீண்டும் கடும் போட்டி உருவாகி வெற்றிபெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே ஒவ்வொரு நாளும் பெரும் விவாத பொருளாக இருந்தது. இந்நிலையில் தான் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விளாத்திகுளத்தில் இதுவரை 9 முறை வென்ற அதிமுகவை வீழ்த்தி திமுக வேட்பாளரான ஜீ.வி. மார்க்கண்டேயன் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தொடர்ந்து பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் மீதான வெறுப்புணர்வு, ஆட்சி மாற்ற சிந்தனை, மக்கள் மனதில் உருவான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான இமேஜ், தேர்தல் வாக்குறுதிகள் என்பதோடு மட்டுமல்லாமல் விளாத்திகுளத்தை பொறுத்த வரை திமுக வேட்பாளரான ஜீ.வி. மார்க்கண்டேயன் என்கிற தனி மனிதனின் வியூகம், கட்சி அடிமட்ட தொண்டன் முதல் அனைத்து தரப்பு மக்களையும் சகோதர பாசத்துடன் அரவணைத்து அன்பு செலுத்தும் ஆற்றல், ஈகை குணம், ஒருங்கிணைக்கப்பட்ட அயராத உழைப்பு, 30 ஆயிரம் பேரை திமுகவில் இணைத்தது ஆகியவையும் திமுக வெற்றிக்கு வலிமை சேர்த்த பிரதான காரணங்கள் ஆகும். 

அதனால் தான் இத்தொகுதியில் 1996ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்றதற்கு பின்னால் ஒரு  25 ஆண்டு கால இடைவெளியை கடந்து ஒரு தலைமுறைக்கு அப்பால் இன்றைக்கு விளாத்திகுளத்தில் திமுகவின் வெற்றிக் கொடி கம்பீரமாக உயர பறக்க தொடங்கியிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

தேர்தல் வெற்றி குறித்து ஜீ.வி. மார்க்ண்டேயன் கூறுகையில்  விளாத்திகுளம் தொகுதி மக்களின் மகத்தான பேராதரவோடு 90,348 வாக்குகள் வித்தியாசத்தில் நான் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த நாட்டை யார் கையில் ஒப்படைத்தால் பத்திரமாக இருக்கும் என்பதை சிந்தித்து தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு வெற்றியை தந்துள்ளார்கள். இந்த வெற்றி திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், தலைவர் மு.க. ஸ்டாலின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. அந்த நம்பிக்கையை மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம், திட்டங்கள், பணிகள் மூலமாக முழுமையாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com