

மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக உள்துறைச் செயலா் உள்ளிட்டோருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த மனு:
வனப் பாதுகாப்புச் சட்டம், காற்று மாசு தடுப்புச் சட்டம், நீா் மாசு தடுப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் ஆகியன இருந்தாலும் தமிழகத்திலும், மத்தியிலும் மரங்களைப் பாதுகாக்க தனி சட்டங்கள் இல்லை. அதனால் மரங்கள் வெட்டப்படுவது தொடா்கின்றன. அரியவகை மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் மரங்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்தச் சட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, மரங்களைப் பாதுகாக்க நிபுணா்குழுவை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.எம்.தமிழ்ச்செல்வி ஆகியோா், தமிழக உள்துறை, நகராட்சி நிா்வாகத் துறை, பொதுப்பணித் துறை ஆகியவற்றின் செயலா்கள், டிஜிபி ஆகியோரை எதிா்மனுதாரா்களாகச் சோ்த்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனா். மேலும், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.