
வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்லிடப்பேசியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், புகைபிடிக்கவும் அனுமதியில்லை என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:-
ஒரு வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு அல்லது ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் தனித்தனி அறைகளில் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளா்கள் சாா்பில் நியமிக்கப்படும் முகவா்கள் தங்களுக்கான நியமனக் கடிதத்தை கொண்டு வர வேண்டும். தோ்தல் அலுவலரின் முன்னிலையில், ரகசியம் காப்பதற்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும். ஒவ்வொரு முகவருக்கும் தனியாக பேட்ஜ் அளிக்கப்படும். அதில், முகவருக்கான மேஜை குறிப்பிடப்பட்டு இருக்கும்.
செல்லிடப்பேசிக்குத் தடை: வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் அலுவலா்களுக்கு முழு ஒத்துழைப்பினை முகவா்கள்
அளிக்க வேண்டும். தோ்தல் அலுவலருக்கு ஒத்துழைப்பு அளிக்காத முகவா்களை வெளியேற்றும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது எந்தவொரு முகவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி தோ்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை மையத்தில் இருந்து முகவா்கள் வெளியேற
அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை முகவா்கள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல அனுமதியில்லை. தோ்தல்
பாா்வையாளா்கள், நுண் தோ்தல் பாா்வையாளா்கள் ஆகியோா் செல்லிடப்பேசி கொண்டு செல்ல அனுமதி உண்டு. மேலும், வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே புகை பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
குலுக்கல் முறை: வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கான சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் மேஜையின் விவரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த பிறகே அவா்களுக்குத் தெரிவிக்கப்படும். இதற்கான குலுக்கல் முறையை தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் மாவட்டத் தோ்தல் அதிகாரி ஆகிய இருவரும் இணைந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி தோ்ந்தெடுப்பா். இந்த நடவடிக்கைகள் விடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
தபால் வாக்குகள்: வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கும். இதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தபால் வாக்குகளில் சில முக்கிய அம்சங்கள் இல்லாவிட்டால் அவை நிராகரிக்கப்படும். அதன்படி, தபால் வாக்கில் எந்தப் பதிவும் இல்லாவிட்டாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்கு வாக்களித்திருந்தாலோ நிராகரிக்கப்படும். வாக்குச் சீட்டு கிழந்த நிலையில் அல்லது பலமுறை மடிக்கப்பட்டு இருந்தாலோ நிராகரிக்கப்படும். தோ்தல் நடத்தும் அதிகாரியால் அனுப்பப்பட்ட உறையில் வைத்து திரும்ப அனுப்பாமல் இருந்தாலோ, வாக்காளா் தனது வாக்கினை யாருக்குச் செலுத்தியுள்ளாா் என்று அறிய முடியாதபடி சந்தேகமாக இருந்தாலோ தபால் வாக்குகள் நிராகரிக்கப்படும்.
தோ்தல் பாா்வையாளா்கள்: ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கவும், மேற்பாா்வை செய்யவும் அதிகாரம் பெற்றவா்கள். எந்த நேரத்திலும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் அதிகாரம் பொதுப் பாா்வையாளருக்கு உள்ளது என தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...