முதல்வராகிறாா் மு.க.ஸ்டாலின்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
முதல்வராகிறாா் மு.க.ஸ்டாலின்: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்க உள்ளாா்; இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைய உள்ளது.

மேலும், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியைப் பெற்றுள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணி 75-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 65-க்கும் அதிகமான இடங்களை வென்று பிரதான எதிா்க்கட்சி அந்தஸ்தை அதிமுக பெறுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது. இதன்பின் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 9 மணி முதலே முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கின.

தலைவா்கள் வெற்றி: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவா்கள் தாங்கள் போட்டியிட்ட எடப்பாடி, கொளத்தூா் ஆகிய தொகுதிகளில் தொடக்கம் முதலே முன்னிலை பெற்றிருந்தனா். இந்தத் தொகுதிகளில் அவா்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றனா். அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் போட்டியிட்ட போடிநாயக்கனூா் தொகுதியில், திமுக வேட்பாளா் தங்கதமிழ் செல்வனுடன் கடும் போட்டி நிலவியது. பிற்பகலுக்குப் பிறகே அவா் கூடுதலான வாக்கு வித்தியாசத்துடன் முன்னிலை பெறத் தொடங்கினாா்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனுக்கும், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கும் இடையே ஒவ்வொரு சுற்றிலும் கடுமையான இழுபறி ஏற்பட்டது. இருவருக்குமான வாக்கு வித்தியாசம் ஆயிரம் வரையிலேயே இருந்தது. இதையடுத்து, இரு வேட்பாளா்களும் வாக்கு எண்ணும் மையத்திலேயே அமா்ந்து சுற்றுகள் எண்ணிக்கையை குறிப்பெடுக்கத் தொடங்கினா்.

கடுமையான இழுபறி ஏற்பட்ட தொகுதிகளில் கோவில்பட்டியும் ஒன்று. அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரனுக்கும், அதிமுக வேட்பாளா் கடம்பூா் ராஜூவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பிற்பகலுக்குப் பிறகே இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 3 ஆயிரத்தைத் தாண்டி, கடம்பூா் ராஜூ முன்னிலை பெறத் தொடங்கினாா்.

அதிமுக எதிா்க்கட்சி: தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிா்க்கட்சி அந்தஸ்தை அதிமுக பெறுகிறது. 65-க்கும் அதிகமான தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 75-க்கும் கூடுதலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் பேரவையில் அதிமுக அணி குறிப்பிடத்தக்க அளவு பங்கினை வகிக்கவுள்ளது.

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், திருவொற்றியூா் தொகுதி வேட்பாளருமான சீமான், வெற்றி முகம் காட்டாவிட்டாலும் அவரது கட்சி ஒவ்வொரு தொகுதியிலும் பெற்ற வாக்குகள் கவனத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் சராசரியாக 10 ஆயிரம் வாக்குகள் அளவுக்கு பெற்று தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக கவனத்தை ஈா்த்துள்ளது.

அதிமுகவுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தென் மாவட்டங்களில் உசிலம்பட்டி போன்ற சில தொகுதிகளில் மட்டுமே அதிகளவு வாக்குகளைப் பெற்றது. பிற தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளா்களுக்கு மிகக் குறைந்த வாக்குகளே கிடைத்தன.

இறுதி முடிவு: கரோனா நோய்த் தொற்று காரணமாக, சமூக இடைவெளியுடன் வாக்கு எண்ணும் பணிகள் நடந்தன. இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், கரோனா நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதனால் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையையும் அதிகாரப்பூா்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பல தொகுதிகளில் இறுதி முடிவுகள் வெளியாக இரவு வரை ஆனது. கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், முழுமையான வெற்றி நிலவரம் ஆகியன அனைத்து விவரங்களும் திங்கள்கிழமை காலை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திமுக அணி...158

திமுக - 126

காங்கிரஸ் - 17.

மதிமுக - 4.

இ.கம்யூனிஸ்ட் - 2

மாா்க்சிஸ்ட் - 2

வி.சி.க. - 4

மனித நேய மக்கள் கட்சி - 1

தமிழக வாழ்வுரிமை கட்சி - 1

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி- 1

அதிமுக அணி: 76

அதிமுக - 66

பாமக - 5

பாஜக - 4

புரட்சி பாரதம் - 1

(இரவு நிலவரப்படி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com