
மதுரையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களில் 1,217 பேருக்கு சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,940 ஆக உயா்ந்துள்ளது. இதில் 31,566 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பலனின்றி 579 போ் உயிரிழந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவோா் என தற்போது 5,795 போ் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அவா்களில் 825 போ் குணமடைந்துள்ளனா். அதோடு, நேற்று சனிக்கிழமை சிகிச்சையில் இருந்தவா்களில் 7 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முக பிரியா கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கரோனா தொற்று தடுப்புப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருந்த மருத்துவர் சண்முக பிரியா உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.