
திருப்புவனத்தை அடுத்த பூவந்தியில் மழையால் அறைவடைக்கு தயாராகி வந்த நெல் மணிகள் முளைத்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேசமடைந்தன.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த சில நாள்களாக பெய்து வரும் திடீர் கோடை மழை காரணமாக 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நெல் மணிகளுடன் வயல்களுக்குள் தேங்கிய தண்ணீல் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகளுக்குபெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை நம்பி நெல் பயிரிட்டு அறுவடையை முடித்த கையோடு விவசாயிகள் கோடை விவசாயத்தை தொடங்கி விட்டனர். ஆனால் திருப்புவனம் அருகே பூவந்தி வட்டார பகுதியி்ல் விவசாயிகள் கடந்த ஜனவரி மாத கடைசியில்தான் நெல் நடவு பணியில் ஈடுபட்டனர்.
வைகை ஆற்றில் இருந்து பூவந்தி வட்டாரத்திற்கு மிகவும் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் தாமதமாக நடவு பணிகளை தொடங்கினர். 120 நாளில் அறுவடைக்கு தயாராகும் ஏ.டி.டீ 40 என்ற நெல் ரகத்தை அனைத்து விவசாயிகளும் பயிரிட்டிருந்தனர்.
தற்போது இந்த நெற் பயிர்கள் வளர்ந்து நெல் மணிகள் முளைத்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இன்னும் பத்து நாட்களில் விவசாயிகள் அறுவடையை தொடங்க இருந்த சமயத்தில் பூவந்தி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக திடீரென தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் நெல் மணிகள் முளைத்த நெற்பயிர்கள் வயல்களிலேயே சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டன. இ்வவாறு 200 ஏக்கருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் இணைந்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக மழை பெய்ததால் தண்ணீர் வெளியேற வழியின்றி வயல்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாய்க்கால்களிலும் வயல்களிலும் தண்ணீர் நிரம்பி இருப்பதால் தண்ணீர் வௌயேற வழியில்லாத நிலை உள்ளது.
பூவந்தியில் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள்.
நான்கு நாள்களாக தண்ணீரிலேயே நெற்கதிர்கள் மூழ்கியதால் அவை மீண்டும் முளைக்க தொடங்கிவிட்டன. இதனால் அறுவடைக்கு தயாராகி வந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பூவந்தி வட்டார விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்து நெல் நடவு செய்தோம். நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி நஷ்டமடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்.
மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே அடுத்து விவசாயம் செய்ய முடியும் என்றனர்.