
கோப்புப்படம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தது ஒரு ஜி.எஸ்.டி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், கடந்த பல மாதங்களாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை.
கரோனா பேரிடர் காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறைகள், கவச ஆடைகள், வெப்பநிலை ஸ்கேனர்கள், ஆக்ஸிமீட்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
சிறுகுறு வணிகம், விமானப் போக்குவரத்து, தங்கும் விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை அரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய அங்காடிகள் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க தேவையான உதவிகளைப் பற்றி விவாதிக்கப்பட வேண்டும். அத்துடன் அதிகாரிகளை அணுகுவதில் உள்ள சிக்கல்களுக்கும் தீர்வுகள் கண்டடையப்பட வேண்டும்.
பேரிடர் காலத்தை மனதில் கொண்டு மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்து தேவையான முடிவுகளை எடுக்க ஏதுவாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.