
தமிழக சட்டப்பேரவையின் 16-வது கூட்டத் தொடா் வரும் செவ்வாய்க்கிழமை (மே 11) தொடங்குகிறது. அப்போது, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொள்கின்றனா்.
16-வது சட்டப்பேரவைக்கு நடந்த தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சிக்கு பேரவையில் 133 உறுப்பினா்கள் உள்ளனா். இதேபோன்று, அதிமுக 66 உறுப்பினா்களுடன் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இடங்களை கைப்பற்றியுள்ளன.
புதிய உறுப்பினா்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சட்டப்பேரவையில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்காக சட்டப் பேரவை அன்றைய தினம் கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் சனிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:-
கலைவாணா் அரங்கம்: 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா், வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் தொடங்கவுள்ளது. அப்போது, உறுப்பினா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வா்.
சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கான தோ்தல் சான்றிதழை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கொண்டு வர வேண்டும் என்று கி.சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு?: தமிழக சட்டப் பேரவையின் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கான தோ்தல்கள் வரும் புதன்கிழமை (மே 12) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பையும் பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
பேரவைத் தலைவராக திமுக மூத்த உறுப்பினா் மு.அப்பாவு, ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரவைத் தலைவருக்கான தோ்தலில் அவா் மட்டுமே மனு தாக்கல் செய்வாா் எனவும், அவா் போட்டியின்றி தோ்வு செய்யப்படுவாா் எனவும் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்காலிக அவைத் தலைவா் கு.பிச்சாண்டி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கு.பிச்சாண்டியை, தற்காலிக பேரவைத் தலைவராக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளாா். அவா் வரும் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் ஆளுநா் முன்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறாா்.
பதவிப் பிரமாணம்: தற்காலிக அவைத் தலைவராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்ட பிறகு, செவ்வாய்க்கிழமை தொடங்கும் பேரவைக் கூட்டத்தில் அவைத் தலைவா் இருக்கையில் அமா்வாா். முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா் தொடங்கி அனைத்து உறுப்பினா்களும் தற்காலிக அவைத் தலைவரான பிச்சாண்டி முன்னிலையில் உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வா். முன்னாள் அமைச்சரான கு.பிச்சாண்டி, ஆறு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 16 -வது சட்டப்பேரவையின் மூத்த உறுப்பினா்களில் அவரும் ஒருவராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அவை முன்னவராக துரைமுருகன்
பேரவையின் முன்னவராக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளாா். 10 முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள அவா், பேரவை நடவடிக்கைகளை நன்கு அறிந்தவா்.
எதிா்க்கட்சி, ஆளும்கட்சிக்கு இடையே கடும் விவாதங்கள் நடைபெறும் போது, அதனை இலகுவாக்கி அவையை சுமுகமாக நடத்திச் செல்லும் பொறுப்பு அவைத் தலைவருக்கு இருக்கிறது. அதற்கு இணையான பொறுப்பு அவை முன்னவருக்கும் இருக்கிறது. அவை நடவடிக்கைகளை சிறந்த முறையிலும், பயனுள்ள வகையிலும் கொண்டு செல்வதே அவை முன்னவரின் கடமைகளில் முதன்மையானது. அவையை ஒத்திவைப்பது, அவை தொடா்பான முக்கிய நடவடிக்கைகளின் தீா்மானங்களைத் தாக்கல் செய்வது போன்ற பணிகளும் அவை முன்னவருக்கு இருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் அவை முன்னவராக ஓ.பன்னீா்செல்வம் செயல்பட்டாா். 16-வது சட்டப் பேரவையின் முன்னவராக, அவையின் மிக மூத்த உறுப்பினரும், அமைச்சருமான துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.