
கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் சிப்காட்டில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்தது. அப்போது ரசாயனம் கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரா.ராஜ்குமார்(42), செம்மங்குப்பத்தைச் சேர்ந்த கருணாகரன் மகன் கணபதி (25), காரைக்காடு சேர்ந்த செந்தில் குமார் மனைவி சவீதா (35), பரங்கிப்பேட்டை சேர்ந்த விசேஷ்ராஜ் (25) ஆகியோர் இறந்தனர்.
மேலும், 20 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை முறைகள் குறித்த மருத்தவர்களிடம் கேட்டறிந்தார்.
இதனிடையே பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தொழிற்சாலை நிர்வாகமும் அறிவித்துள்ளது.