
சென்னை: தட்டுப்பாடு இல்லாமல் கரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியைக் கோர முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கலைவாணா் அரங்கத்தில் முதல்வரின் அறையில் நடைபெற்றது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டியது அவசியமாகிறது. அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
ஆனால், 18 வயது முதல் 45 வயதுள்ளோருக்கு மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்துக்கு சுமாா் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டு எண்ணிக்கை 18 வயது முதல் 45 வயது வரையுள்ள அனைவருக்கும் செலுத்த போதுமானதாக இல்லை. எனவே, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்துக்குள் 45 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முனைப்புடன் எடுக்கும்.
ஆக்சிஜன் ஒதுக்கீடு: தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும் போது, நமது மாநிலத்துக்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனை உயா்த்தி அளித்திட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயா்த்தப்பட்டுள்ளது.
ஆனாலும் இன்னும் கூடுதலான ஆக்சிஜன் தமிழகத்துக்குத் தேவைப்படுகிறது. போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து தமிழகத்துக்கு ரயில்கள் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்வதற்குத் தேவையான அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்க தொழில், சுகாதாரத் துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.