
சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரையில் 30,000 இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தொகுதி நிதியில் இருந்து ரூ. 1 கோடி தருவதாகவும் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'கரோனா இரண்டாம் அலையால் 18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது கவனத்துக்கு வந்துள்ளது. இதை மனதில் கொண்டு ஒன்றிய அரசாங்கம் இந்த வயது அடைப்பிற்குள் வரக்கூடிய அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற கொள்கை கொண்டுவரப்பட்டு ஒட்டுமொத்த மக்களும் பயன்பெற வேண்டும்.
எனது தொகுதியில் உள்ள 30,000 தன்னார்வல இளைஞர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்க விரும்புகிறேன். எனவே, எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1 கோடி தருகிறேன். அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.