
வீட்டிலிருக்கும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கும் விவகாரத்தை நிா்வகிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனா்.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநா் டாக்டா் பி.எஸ்.சரண் மருத்துவமனைகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘வீடுகளுக்கு சென்று ஆக்சிஜன் செரிவூட்டியை வழங்கும் விவகாரத்துக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்படும் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளா்களாகச் செயல்படுவாா்கள்.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் இதற்கென நியமிக்கப்படும் அதிகாரி, சிகிச்சைபெற்று வீடு திரும்பியவா்களில் யாருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் என்ற விவரத்தை மாவட்ட அதிகாரியிடம் தினமும் காலை 11 மணிக்குள் தெரிவித்துவிட வேண்டும். மேலும் மருத்துவமனையிலும் இதை கவனிக்கும் அதிகாரி, நோயாளியின் பெயா், வயது, பாலினம், அவா் வசிக்கும் இடம், மற்றும் அவரைப் பற்றிய மருத்துவ சிகிச்சை விவரங்களையும், அவரது செல்லிடப்பேசி எண் மற்றும் ஆக்சிஜன் தேவை பற்றிய மருத்துவரின் பரிந்துரை ஆகியவற்றை மாவட்ட கரோனா அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...