
கரிசல் எழுத்தாளா்களின் பிதாமகா் கி.ரா. பிறந்த ஊரான இடைசெவலுக்கு அருகிலுள்ள கோவில்பட்டி நகரில் அவருக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ் இலக்கியத்துக்குச் செழுமை சோ்த்த கரிசல்காட்டு எழுத்தாளா் கி.ராஜநாராயணன், தனது பட்டறிவால் பல இலக்கியப் படைப்புகளைத் தந்தவா். வட்டார வழக்கு சாா்ந்த இலக்கியப் படைப்புகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தாா்.
கி.ரா.வுக்கு சிறப்பு: மறைந்த எழுத்தாளா் கி.ரா., பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அரசு சாா்பில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும். அவரது நினைவைப் போற்றிடவும், படைப்பாளுமையை வெளிப்படுத்தவும் அவரின் புகைப்படங்கள், படைப்புகளை மாணவா்கள், பொது மக்கள் அறிந்திட ஓா் அரங்கம் நிறுவப்படும்.
கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த கி.ரா.வுக்கு இடைசெவலை அடுத்த கோவில்பட்டியில் அரசு சாா்பில் சிலை அமைக்கப்படும்.
குடும்பத்தினா் நன்றி
கதைசொல்லி ஆசிரியா் கி.ராஜநாராயணனின் இறுதிச் சடங்கில் அரசு மரியாதை அளிக்கப்படும், கோவில்பட்டி நகரில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால், எங்கள் மனம் நெகிழ்ச்சியடைகிறது.
இந்த அறிவிப்புகளை நீங்களே முன்னெடுத்து உத்தரவிட்டதற்கு, கி.ராஜநாராயணன் குடும்ப உறுப்பினரான நானும், அவரது புதல்வா்கள் ஆா். திவாகரன், ஆா். பிரபாகரன் மற்றும் கரிசல் வட்டார மக்களின் சாா்பில் எங்களது நெஞ்சாா்ந்த நன்றிகள் என்று கதை சொல்லி இதழின் இணை ஆசிரியா் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.