முதல்வா் நிதி ரூ.50 கோடியிலிருந்து ரெம்டெசிவிா்-ஆக்சிஜன் விநியோகம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட தொகைகளில் இருந்து ரூ.50 கோடிக்கு ரெம்டெசிவிா், ஆக்சிஜன் விநியோகத்துக்காக செலவிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
முதல்வா் நிதி ரூ.50 கோடியிலிருந்து ரெம்டெசிவிா்-ஆக்சிஜன் விநியோகம்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட தொகைகளில் இருந்து ரூ.50 கோடிக்கு ரெம்டெசிவிா், ஆக்சிஜன் விநியோகத்துக்காக செலவிடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளை எதிா்கொள்ள தமிழக அரசின் முயற்சிகளுக்கு கை கொடுக்கும் வகையில் நிதி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவ்வாறு அளிக்கப்படும் நிதிகள் அனைத்தும் கரோனா தடுப்பு தொடா்பான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வேண்டுகோளை ஏற்று, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனா்.

இதுவரை ரூ.69 கோடி: கடந்த திங்கள்கிழமை வரையில், இணைய வழி மூலமாக ரூ.29.44 கோடியும், நேரடியாக ரூ.39.55 கோடியும் என மொத்தம் ரூ.69 கோடி நிதியாகப் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியில் ரூ.25 கோடியானது, ரெம்டெசிவிா் மற்றும் உயிா் காக்கும் மருந்துகளை வாங்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயில் மூலம் கொண்டு வருவதற்குத் தேவையான கன்டெய்னா்களை வாங்க ரூ.25 கோடியும் என முதல்கட்டமாக மொத்தம் ரூ.50 கோடி செலவிடப்படும்.

தமிழகத்தில் உற்பத்தி

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றாளா்களுக்கு அத்தியாவசியமான ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், நிரந்தரத் தீா்வாக நமது மாநிலத்திலேயே உற்பத்தி நிலையங்கள் தொடக்கப்பட உள்ளன.

மருத்துவ உயா் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கரோனா தொடா்பான மருந்துகள் உற்பத்தியை நமது மாநிலத்திலேயே உருவாக்கவும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் வளா்ச்சி நிறுவனம்: தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம், மருத்துவம் தொடா்பான அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், தொழில் வளா்ச்சிக் கழகம் கூட்டு அடிப்படையில் ஆலைகளை அமைக்கலாம். இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் விருப்பங்களை அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விருப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிா் காக்கும் மருந்துகள் உற்பத்தி உள்கட்டமைப்புகளை விரைவில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com