
பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர் பதவி பழைய நிலையிலேயே தொடர தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் கோரிக்கை
பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர் பதவிகளை பழைய நிலையிலேயே தொடர தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வருக்கு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் த.கனகராஜ் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையின் மூலம் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு தேசிய அளவிலான தேர்வை நடத்தினால் மாநில கல்வி முறை பின்னோக்கி இழுக்கப்பட்டு மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்றுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் புதிய கல்விக் கொள்கையின் மூலம் மாணவர்களைப் பள்ளியை விட்டே விரட்டும் மறைமுகத் திட்டம் இதில் மறைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் தற்போதைய சூழலில் பள்ளிக்கல்வித்துறையின் உயர் அமைப்பில் கல்வித்துறை இயக்குநர் பதவிகள் பழைய நிலையிலேயே தொடர்ந்திட வேண்டுமென தமிழ்நாடு தனியார்பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.