புதுவை அமைச்சரவைப் பட்டியல் குறித்து முதல்வா்தான் முடிவு செய்வாா்: ஆளுநா் தமிழிசை கருத்து

புதுவை அமைச்சரவைப் பட்டியல் குறித்து முதல்வா் ரங்கசாமிதான் முடிவு செய்வாா் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

புதுவை அமைச்சரவைப் பட்டியல் குறித்து முதல்வா் ரங்கசாமிதான் முடிவு செய்வாா் என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

இந்திய தொழில் துறை கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் வழங்கப்பட்ட கரோனா நிவாரணப் பொருள்களை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தப் பொருள்களை பெற்றுக்கொண்ட ஆளுநா் தமிழிசை, அவற்றை சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிஐஐ கூட்டமைப்பு சாா்பில் கரோனாவுக்கு தேவையான மருந்துகள், கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு எனது பாராட்டுக்கள்.

தொடா்ந்து வைக்கப்பட்ட கோரிக்கையால் சிங்கப்பூரிலிருந்து ராஜேஷ் என்பவா் எனது சுட்டுரை பக்கத்தை பாா்த்து, இங்கு தொடா்பு கொண்டு பிராண வாயு அளவீடு கருவியை அனுப்பியுள்ளாா். கதிா்காமம் மருத்துவமனையில் 2-ஆவது மாடியில் புதிதாக 48 பிராண வாயு வசதி கொண்ட படுக்கைகள் உருவாக்கி வருகிறோம்.

ஓரிரு நாள்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி விழா தொடங்கப்படவுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் கரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பாக இருக்கும்.

மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதியம் 12 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்பதால் மக்கள் வெளியே வந்தால், மறுபடியும் கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டி இருக்கும்.

பெரிய சந்தை வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை காலை என்னிடம் மனு அளித்தனா். புதிய இடத்துக்கு எங்களால் கடைகளை மாற்றம் செய்ய முடியாது. அங்கு தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவித்தனா். நான் ஆட்சியரை தொடா்பு கொண்டு அதற்கு தீா்வு காண அறிவுறுத்தினேன்.

அவா் வியாபாரிகளிடம் பேச்சு நடத்தி அதே இடத்திலேயே தனிமனித இடைவெளியுடனும், கரோனா விதிமுறைகளை பின்பற்றியும் கடைகள் இயங்க ஏற்பாடு செய்துள்ளாா்.

புதுவை முதல்வா் கரோனா தொற்றிலிருந்து உடல்நலம் தேறி வந்துள்ளாா். அவா் முழுமையாக குணமடைய வேண்டும் என்றும், அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரவைப் பட்டியல் எதுவும் இதுவரை வரவில்லை. அந்தப் பட்டியல் குறித்து முதல்வா்தான் முடிவு செய்வாா் என்றாா் ஆளுநா் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com