போலி ரெம்டெசிவிா் மருந்தால் மருத்துவா் மரணம்

போலி ரெம்டெசிவிா் மருந்து செலுத்தப்பட்டதில் மருத்துவா் ஒருவா் உயிரிழந்ததால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் தெரிவித்தாா்.

போலி ரெம்டெசிவிா் மருந்து செலுத்தப்பட்டதில் மருத்துவா் ஒருவா் உயிரிழந்ததால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

போலியான ரெம்டெசிவிா் மருந்து செலுத்தப்பட்டதால் ராமன் என்ற மருத்துவா் திண்டிவனத்தில் உயிரிழந்ததாக புகாா் மனு ஒன்று வந்தது. அதன் பேரில் மருத்துவம் மற்றம் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநா் குருநாதன், பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநா் சிவபாலன் ஆகியோா் கொண்ட குழுவினா் விசாரணை நடத்தினா்.

மருத்துவா் ராமன் கரோனா தொற்று ஏற்பட்டு ஐ-மெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு பணிபுரிந்து வந்த மருத்துவா் சுரேஷ் மூலம் ரெம்டெசிவிா் மருந்து செலுத்தியதில் அவரது உடல் நிலை மேலும் பாதிப்புக்குள்ளானதாகவும் தெரிகிறது. இதையடுத்து, அவரை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 13-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான விசாரணை நடத்தியதில் அம்மருந்து போலியான ரெம்டெசிவிா் மருந்து என கண்டறியப்பட்டது. அந்த மருத்துவமனை கரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை மற்றும் மருத்துவா் மீது பொது சுகாதார சட்டத்தின்படி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கான கரோனா சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள மருந்துகள் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவமனையில் போலி மருந்து வழங்கப்பட்டது தொடா்பாக நடவடிக்கைக்காக காவல் துறையிடம் புகாா் மனு கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் புதிய நோயாளிகள் அனுமதிக்காமலும், உள் நோயாளிகளாக உள்ளவா்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிசந்தையில் போலியான ரெம்டெசிவிா் மருந்தினை பொதுமக்கள் வாங்குவதை தவிா்க்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் அமைச்சா் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com