18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: முதல்வர் தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பயனாளிக்கு சான்றிதழை  வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பயனாளிக்கு சான்றிதழை  வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


திருப்பூர்: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சேலத்தில் ஆய்வுப் பணிகளை முடித்த பின்,  திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் அருகே உள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவுக்குப் பகல் 12.05 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்தார். அங்கு 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார். 

இதைத் தொடர்ந்து, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த விவரங்களைக்  கேட்டறிந்தார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.2.70 கோடி மதிப்பிலான கரோனா நிவாரண நிதியை திருப்பூர் தொழில் துறையினர் வழங்கினர்.  தொடர்ந்து  கோவையில் ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன், திருப்பூர் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் அ.அமல்ராஜ், மாநகரக் காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், கோவை சரக டிஐஜி நரேந்திரன் நாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 2,124 முகாம்களில் கரோனா தடுப்பூசி: இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கடந்த மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18 முதல் 44 வயதுக்கு உள்பட்ட 3 கோடியே 63 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 2,124 முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com