6 மாவட்டங்களில் கரோனா தொற்று குறையவில்லை: முதல்வர்

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கரோனா பரவல் குறையவில்லை என்று அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
6 மாவட்டங்களில் கரோனா தொற்று குறையவில்லை: முதல்வர்
Published on
Updated on
2 min read

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கரோனா பரவல் குறையவில்லை என்று அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் முழு தளர்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவம், காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்,சி ஈரோடு, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் குறையவில்லை. எனவே இந்த 6 மாவட்டங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இதில், கோவை, சேலம் மாவட்டங்களில் அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அதிகளவில் கரோனா தடுப்பூசிகள் போடப்பட விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளைத் தர வேண்டும் என்றார்.

முதல்வர் பேசியதன் முழு விவரம்:

கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட இந்த அரசு எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகள் காரணமாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தாலும், மாநில அளவிலும், சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், மாவட்ட வாரியாக இத்தொற்றின் தாக்கத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இத்தொற்றின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது.

எனவே, இந்த மாவட்டங்களில் தொற்றினைக் கட்டுப்படுத்தவும், இறப்புகளைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து உங்களது கருத்துகளைக் கேட்டறியவும், ஆலோசனை செய்திடவும் இந்த ஆய்வுக் கூட்டத்தை நான் கூட்டியுள்ளேன்.

இன்று ஆய்வு செய்யப்படும் ஆறு மாவட்டங்களைப் பொருத்தவரையில், அரசுத் துறையிலும், தனியார்த் துறையிலும் நல்ல மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாவட்டங்களாகும். இந்தக் கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக போதிய படுக்கை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.

நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்த மாவட்டங்களில் நன்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், நோய்ப்பரவல் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்காணித்து, அப்பகுதிகளில் போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்த் தொற்றுள்ள அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தடுப்பூசி போடும் பணியைப் பொருத்தவரை கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. மற்ற நான்கு மாவட்டங்களிலும் 18 வயதிலிருந்து 44 வயது வரையில் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகளை அதிக அளவில் உடனடியாக அனைவருக்கும் கிடைத்திட செய்ய வேண்டும்.

இரண்டாம் அலையின் இந்தக் கட்டத்தில் நோய்ப் பரவல் கிராமப் பகுதிகளிலும் அதிகமாக காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட வேண்டும்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அரசு அளவில் தேவைப்படும் உதவிகள் பற்றியும் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். கரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கத்தை நமது மாநிலம் கட்டுப்படுத்துவதற்கு, இந்த ஆறு மாவட்டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடைவது அவசியம் என்பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com