மைதிலி சிவராமன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

மைதிலி சிவராமன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மைதிலி சிவராமன் மறைவு: தலைவர்கள் இரங்கல்
Published on
Updated on
1 min read

மைதிலி சிவராமன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது. மைதிலி சிவராமன் பெண்களும் மதசார்பின்மையும், பெண்ணுரிமை, சமூகம்- ஒரு மறு பார்வை உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதி, சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராக இறுதி மூச்சு அடங்கும் வரையில் பொறுப்பிலிருந்து இயங்கிய மைதிலி சிவராமன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் பெண்ணுரிமை இயக்கத்திற்கும், சிபிஎம் கட்சித் தோழர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே. பாலகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், தொழிற்சங்க, பெண்கள் இயக்கத் தலைவருமான மைதிலி சிவராமன் (வயது 81) கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவருக்கு செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.
தோழர் மைதிலியின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், பெண்கள் இயக்கத்திற்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும், அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வீரவணக்கத்தையும், புகழஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது கணவர் கருணாகரனுக்கும், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தொல்.திருமாவளவன்: மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவருமான மைதிலி சிவராமனின் மறைவு விளிம்புநிலை மக்களுக்கு நேர்ந்த பேரிழப்பாகும்! அவருக்கு எமது அஞ்சலியையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிந்தனை, நடைமுறை என இரு தளங்களிலும் விளிம்புநிலை மக்களுக்காக உழைத்த தோழர் மைதிலி சிவராமனின் மறைவு உழைக்கும் மக்களுக்குப் பேரிழப்பு. அவருக்கு எமது செம்மாந்த  வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com