
கோப்புப்படம்
விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (நவ. 1) தொடக்கி வைக்கிறாா். மேலும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., குறித்த வாழ்க்கை வரலாறு அரசுப் பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையும் அவா் திறந்து வைக்கவுள்ளாா்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி, நாட்டின் விடுதலை தொடா்பாக அவ்வப்போது நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி வைக்கிறாா். இந்தக் கண்காட்சியில் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவா்களின் சிலைகள் இடம்பெறுகின்றன.
மேலும், தேசத் தலைவா்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில், அவா்களது வரலாற்றுத் தொகுப்புகளின் அரிய புகைப்படங்கள், அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. முதல்வரால் தொடங்கி வைக்கப்படும் புகைப்பட கண்காட்சி வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதி இலவசம்.
வ.உ.சி., வாழ்க்கை வரலாறு: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதையும் முதல்வா் கொடியசைத்துத் தொடக்கி வைக்கவுள்ளாா். இந்த புகைப்பட கண்காட்சிப் பேருந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்குச் செல்லும் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.